Thursday, January 5, 2017

துயரங்களிலிருந்து மீளுவது எப்படி? விதியை வெல்வது எப்படி?

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

துயரங்களிலிருந்து  மீளுவது  எப்படி
விதியை       வெல்வது       எப்படி. 

(ஸ்வாமி   ஸதாசிவ   கிரி)

துயரங்களிலிருந்து மீளுவதின் வாயிலாக விதியை எப்படி மாற்றியமைத்து கொள்ளலா-மென்பது தான் இப்பொழுது நாம் ஆராய்ந்து பாற்க்கபோகும் விஷயமாகும். இவ்விஷ-யத்தில் மறைநூல்களும் பாரத நாட்டைச் சார்ந்த ஆன்றோரும் காட்டுகின்ற பாதையை பின்பற்றிகொண்டும் அதே நேரம் பகுத்தறிவுக்கும் சுதந்திர சிந்தனைக்கும்  இடமளித்து கொண்டும் நாம் முன்னே செல்வோம். 

உலகத்தை ஒட்டுமொத்தமாக ஒரு சைதன்யவசஸ்துவாக பார்த்து வழிபடவேண்டுமென்பது  வேதத்தை அடிப்படையாகக் கொண்டு பாரதத்தில் தோன்றியுள்ள அனைத்து சமயங்களின் கருத்தாகும். ஆகையினாலே உயிருள்ள பொருளாக காட்சியளித்தாலும் ஜடப்பொருளாக காட்சியளித்தாலும் அனைத்திநிடத்தும் ஒரு பொதுமரியாதையுடன் நாம் நடந்து கொள்ளவேண்டுமென்பது  நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறையாகும். 

கிறஸ்தவர்கள் (Christians) சொல்லக்கேட்டிருக்கிறேன் "மனிதனைத்தவிர மற்ற உயிரினங்-களனைத்தையும், எல்லா ஜடப்பொருட்களையும், மனிதன் தன் சுகத்திர்க்காகவும் சுகவாழ்க்-கைக்காகவும் துன்புறுத்தலாம், கொல்லலாம், கொன்று உணவாக்கிகொள்ளலாம்; இச்செய-லில் தப்பு அல்லது பாவம் என்று நினைப்பதற்கு ஒன்றும் இல்லை" என்று.

 இக்கருத்தின் அடிப்படையில் இயங்குகின்ற, அதாவது, கிரிஸ்தவசிந்தனையின் பிடியில் சிக்கியுள்ள மேல்நாட்டு நாகரீகமும் மற்றும் அரசாங்கங்களும் பஞ்சபூதங்களுக்கும் விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் எப்பொழுதும் துன்பம் விளைவித்துக்கொண்டு இயங்குகின்றன.  பூமிக்கடியில் அணுவாயுத சோதனை, கடல்வாழ் உயிரினங்களை விநோதத்திரற்காகவும் உணவிற்காகவும் வலைவீசியோ மற்று உபாயங்களினாலோ பிடித்தல், பசுமாடு எருமைமாடு போன்றவற்றை கசாப்பு செய்தல், காளையை எதிரிட்டு போராடவைத்து கொல்லுதல் (Bull Fight of Spaniards), இரசாயனப்-புகையால் வளிமண்டலத்தை மாசுபடுத்துதல், இரசாயனக்கழிவுகளையும் பெட்ரோளியப் பொருட்களையும் நீர்நிலைகளிலும் ஆழ்கடல்களிலும் தள்ளிவிடுதல், விண்வெளியில் Star-war அதாவது செயர்க்கைகோள்களை செலுத்தி ஆதிக்கம் புரிதல் - இப்படி இந்தப்பட்டியல் எவ்வளவு வேண்டுமானாலும் நீண்டு கொண்டே போகும்.

இச்செயல்களின் எதிர்விளைவாக இயற்க்கை சீற்றம் கொண்டுள்ளதை இன்று நாம் HIV AIDS என்ற ஒரு மாபெரும் தீயசக்தியின் உருவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஆபத்திலிருந்து மனிதகுலம் தப்பிக்கவேண்டுமென்றால் பாரதப்பண்பாட்டிற்கும் கலாச்சாரத் திற்கும் இணங்க நாம் உலகத்தை ஒட்டுமொத்தமாக ஆண்டவனின் தூல-உருவாகப் பார்த்து மதித்து நடக்க கற்றுக்கொண்டே ஆகவேண்டும். 

"ஸர்வம் கல்விதம் பிரம்ம", "நேஹ நாநாஸ்தி கிஞ்சன" போன்ற உபநிஷத் வாக்கியங்கள் உலகத்தை ஆண்டவனின் பரந்த உருவமாகப் பார்க்க நம்மைப் பணிக்கிறது.  "வானும் திசைகளும் மாகடலும் ஆய பிரான் தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பி" எனும் திருவாசகச் செய்யுளும் இக்கருத்தையே மிகத்தெளிவாக நமக்கெடுத்துரைக்கிறது. 

ஆண்டவன் ஒரே நேரத்தில் சேதனமாகவும் அசேதனமாகவும் இருக்கிறான்.  தூலப்பார்வைக்கு சக்தி மட்டும் இருப்பது தான் நமக்குத் தெரியும்.  ஆனால் அதற்குப் பின்னால் சக்தன் இருப்பதை நாம் அனுமானத்தாலும் அனுபவத்தாலும் உணர்ந்துகொள்ள இயலும்.  என்னவென்றால் சேதனனாகிய சக்தனில்லாமல் ஜடமாகிய சக்தியால் தனித்து நிற்க இயலாது.  விஞ்ஞானம், பூகோளத்தை ஒட்டுமொத்தமாக ஒரு ஜடவஸ்துவென்று கூறும்.  இக்கருத்து நிஜம் தானா என்று ஆராய்ந்து பார்ப்போம்.  நமக்கென்ன தெரியவருகிறது?  ஜடமென்று நாம் நினைக்கக்கூடிய இப்பூமியானது சேதனன் செய்கின்ற பல காரியங்களையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது என்பதாகும் அது.  உதாஹர-ணத்திர்க்கு  பூமியின் ஈர்ப்புச் சக்தியைப் பார்ப்போம்.  பூமியிலிருந்து இரண்டு இலக்ஷம் மைலுக்கப்பாலிருக்கிறது சந்திரன் என்றழைக்கப்படும் கோளம்.  இக்கோளத்தை சுதந்திர-மாக சுற்றித்திரிய விடாமல் பூமி தன ஈர்ப்புச் சக்தியால் தன்னைச் சுற்றிவரப் பணிக்கிறது.  

இதுபோல் விஞ்ஞானினிகள் விண்வெளிக்கனுப்பும் செயற்கை கோள்களையும்பூமி தன்னைச் சுற்றிவரப் பணிக்கிறது.  ஒரு சேதனன் செய்யக்கூடிய காரியம் தானேஇது?  ஜடத்திற்கு ஈர்ப்புச் சக்தி என்கிற ஆற்றல் உண்டாகிவிடுமா?  செயலற்றிருத்தல் என்று தானே ஜடம் என்கின்ற வார்த்தைக்குப் பொருளாகிறது. 

இனி ஜடமென்று விஞ்ஞானிகள் கூறுகின்ற சந்திரகோளத்தைப் பார்ப்போம். சந்திரனுக்கு நம் சாஸ்திரங்களில் ஓஷதீசன் என்று பெயர்.  ஓஷதீசன் என்றால் ஸஸ்ஸியவகை-களுக்கெல்லாம்  அதிதேவதை என்று பொருள்.  சந்திரன் பூமியிலுள்ள செடி, கொடி, மரம் போன்ற எல்லா ஸஸ்ஸிய வகைகளையும் தன் குளிர்ந்த கிரணங்களால் வளரச்செய்கிறான்.  வெங்காயம் போன்ற ஸஸ்ஸியங்களைத் தவிர பெரும்பாலான அதாவது தொண்ணூறு சதவீதத்திற்கும் மேற்ப்பட்ட மற்ற ஸஸ்ஸியவகைகள் வளர்பிறையில் கூடுதல் வளர்ச்சியும் தேய் பிறையில்  குறைந்த வளர்ச்சியும் உடையதாக காணப்படுகிறது.  வெங்காயத்தின் குடும்பத்தை சார்ந்தவைகளுக்கு தேய்பிறையில் வளர்ச்சி கூடுதலும் வளர்பிறையில் வளர்ச்சி குறைவுமாக காணப்படுகிறது.  (இவ்விஷயம் ஸ்தாவரங்களின் ஆராய்ச்சியாளர்கள் (Botanists) நன்கு உணர்ந்திருக்கும் உண்மை) அது எப்படியானாலும் பறவாயில்லை.  இங்கே எடுத்துரைக்க வந்த விஷயம், சந்திரன் இல்லையென்றால் பூமியில் எவ்விதமான ஸஸ்ஸியவகைகளும் இராது என்றுணர்த்துவதாகும்.  ஸஸ்ஸியங்களில்லை என்றால் பூமியில் பிராணவாயு சிறிதளவுமிராது.  பிராணவாயு இல்லாத நிலையில் பூமியில் விலங்குகளோ பறவைகளோ மனிதர்களோ உயிருடன் இருக்க முடியாது.  பூமியில் இவ்வளவு செயல்களும் நடந்தேற சந்திரன் தன்னிடமிருந்து வெளியேறறிக் கொண்டிருக்கும் சக்தியே தான் காரணம்.  ஆக சந்திரனை எவ்வாறு ஜடவஸ்துவென்று கூற முடியும்?

இனி நமது உடலை பார்ப்போம்.  அது தனிப்பட்ட நிலையில் ஜடம் தான்.  அதை இயக்குவதற்கு அதனுளே ஒரு சேதனன் இருந்தாக வேண்டும்.  இச்சேதனனை நாம் ஜீவாத்மா என்றழைக்கிறோம்.  இதுபோலவே ஜடவஸ்துக்களை ஆதாரமாகக்கொண்டு உலகம் முழுதும் நிறைந்து நிற்கின்ற சைதன்னியமானது உலகத்தை இயக்கி வருகிறது.  பூகோளத்தை ஆதாரமாகக் கொண்டு அதில் பூமிதேவி என்று நாம் அழைக்கின்ற சேதனப்பொருளானது பல காரியங்களையும் செய்து வருகின்றது.  இதைப்போல் ஸூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி போன்ற எல்லா கோளங்களையும் நக்ஷத்திரங்களையும் அவைகள் வெளியேற்றிக்கொண்டிருக்கும் சக்தியின் அடிப்படையில் நம் சாஸ்திரங்கள் சேதனப் பொருட்களாகவே பார்க்கிறது.  நவக்கிரகங்களையும் நக்ஷத்திரங்களையும் ஆராதிக்கவேணுமென்று நம் சாஸ்திரங்கள் கூறுவது இக்கருத்தின் அடிப்படையில் தான்; அல்லாது மூடநம்பிக்கையின் பெயரிலல்ல.  

சைதன்னியம் ஊடுருவி நிற்காத எந்தச் சிறு பகுதியும் உலகத்திலில்லை.  ஒவ்வொரு ஜடவசஸ்துவிர்க்கும் அந்தர்யாமியாக இருந்துகொண்டு ஒவ்வொன்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் சேதனனை  நம் வேதங்களும் சாஸ்திரங்களும் அந்தந்த வஸ்துவிற்க்கு அதிஷ்டாத்று தேவதை என்று கூறுகிறது.  இந்தப்பட்டியலில் அடங்கியுள்ள தேவதைகள் தான் இந்திரன், அக்னி, யமன், வருணன், வாயு, சந்திரன் முதலானோர்.  இ்த் தேவதைகள் அண்டத்தளவிலும் (Macrocosm) பிண்டத்தளவிலும்  (Microcosm) உள்ளனர்.  அதாவது ஸமஷ்டிப் பிரபஞ்ச அளவிலும் வியஷ்டியாகிய ஜீவனுடம்பிலும் இவர்களெல்லாம் இருந்து கொண்டு உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  உதாஹரணத்திர்க்கு இந்திரன் சமஷ்டி அளவில் கிழக்கு திற்க்கில் இருக்கிறான்.  ஜீவஉடம்பில் புஜங்களில் இருக்கிறான்.  வருணன் சமஷ்டி அளவில் மேற்கு திக்கில் இருக்கிறான்.  ஜீவஉடம்பில் ருசி பார்க்கும் நாக்கில் இருக்கிறான்.  இது போல் அண்டத்திலுள்ள எல்லா தேவதைகளின் சக்தியும் சிறிய அளவில் பிண்டத்திலும் இருக்கிறது.  இவ்விதம் உலகத்திலுள்ள அத்தனை பொருட்களும் பூமி, சந்திரன், ஸூரியன் ஆகியோரின் ஈர்ப்புச் சக்தியைப்போல் ஒரு நுட்பமான சக்தியை தங்களின் தகுதிக்கேற்றவாறு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.  இதற்க்கு ஆங்கிலத்தில் vibration (துடிப்புச் சக்தி) என்று கூறுவர்.  இந்த துடிப்புச் சக்தியானது அனுகூலமாகவும் விபரீதமாகவும் இடத்திற்கும் ஆளுக்கும் சந்தற்பத்திற்க்கும் தக்கபடி அமையும்.  மனது நர்ப்பண்புகளும்  அன்பும் உடையதாக இருந்தால் ஆனந்தத்தை விளைவிக்கக் கூடிய அனுகூலச் சக்தியை (Pleasant Vibration) தனக்குச் சுற்றிலும் பரப்பிக் கொண்டிருக்கும்.  மனம் போட்டி, பொறாமை, துவேஷம், திருப்தியின்மை போன்ற குணங்கள் நிரம்பியதாக இருக்குமானால் ஆனந்தத்திற்க்கு மாறாக அமைதியின்மை, துக்கம், பயம் - இவைகளை விளைவிக்கக் கூடிய விபரீத சக்தியை (Unpleasant Vibrations) தனக்குச் சுற்றிலும் பரப்பிக் கொண்டிருக்கும்.  

இயற்கையில் சாத்விக இராஜஸ தாமஸ குணங்கள் என்று மூன்று குணங்கள் உள்ளன.  இம்மூன்று குணங்களும் பலப் பல வித்தியாசமான அளவில் சேர்ந்து தான் இவ்வுலகமே உருவாயிருக்கிறது.  இவைகளுள் சத்துவ குணம் ஒளிமயமானது, ஆனந்தமயமானது, நேச-சக்தியை தனக்குச் சுற்றிலும் பரப்பிக் கொண்டிருக்கும் தன்மை வாய்ந்தது.  தாமஸ குணம் இதற்க்கு நேர்மாறாக இருளடைந்தது.  சோம்பல், மயக்கம், உறக்கம் முதலிய தன்மை வாய்ந்தது.  தனக்குச் சுற்றிலும் சோம்பலையும் மயக்கத்தையும் பரப்பிக் கொண்டிருக்கும்.  இராஜஸகுணம் தற்பெருமை வாய்ந்தது; போட்டி பொறாமைக்கு மனதை எப்பவும் தூண்டக் கூடியது.  இது திருப்தியின்மையையும் அமைதியின்மையையும் தனக்குச் சுற்றிலும் பரப்பிக் கொண்டிருக்கும் இயல்புடையது. சாத்விகத் தன்மையை முக்கியமாகக் கொண்டு தேவர்-களும், இராஜசத் தன்மையை முக்கியமாகக் கொண்டு அஸுரர்களும், தாமஸத் தன்மையை முக்கியமாகக் கொண்டு பூத்-பிரேத-பிசாசு வகைகளும் தோன்றியிருக்கின்றன.  இதே போல் சாத்விக குணத்திலிருந்து மனமும் இராஜஸ குணத்திலிருந்து பிராணனும் பத்து புலன்களும் (ஞானேந்திரியம் ஐந்து கர்மேந்திரியம் ஐந்து) தாமஸ குணத்திலிருந்து ஜடவஸ்த்துக்களாகக் காட்சியளிக்கும் தூலப் பிரபஞ்சமும் எல்லாஜீவர்களுடைய தூல உடம்பும் தோன்றின. 

உலகத்தில் எல்லா இடத்திலும் எல்லா பொருட்களிலும் இம்மூன்று குணங்களும் ஊடுருவி இருக்கிறது.  ஆனால் ஒவ்வொன்றிலும் இக்குணங்கள் ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது.  ஒரு சில செடி-கொடி-மரங்களில்  சாத்விகத் தன்மை மிகுந்துள்ளது.  எடுத்துக் காட்டாக துளஸி, பச்சைப் பயிறு, அரசு, வேம்பு, வில்வம், பூவரசு இவைகளைக் கொள்ளலாம்.  விலங்கினங்களில் முக்கியமாக பசுமாட்டைக் கொள்ளலாம்.  சாத்விகத் தன்மை மிகுந்த பொருட்களும் உயிரினங்களும் பூஜைக்குரியவை என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இவைகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்வதால் நம் மனதில் ஆனந்தமும் அமைதியும் பெருகுகின்றது.  மனிதர்களிலும் இம்மூன்று குணங்களின்  ஏற்ற த்தாழ்வுக்கேர்ப பிரிவுகள் உருவாகின்றன.  சாத்விகத்தன்மை மிகுந்தவர்கள் பொறி-புலன்களை கட்டுப்-படுத்தி தவநெறியில் பெரும்பாலும் காலத்தை கடத்த விரும்புவார்கள்.  இவர்கள் தங்கள் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், நண்பர்கள், செய்யும் தொழில் இப்படி எல்லாவற்றிலும் சாத்விகத்தன்மை வாய்ந்த மனிதர்களுடனும் சுற்றுச் சூழலுடனும் தொடர்பு கொள்ள விரும்புவார்கள்.  அதிமானுடர்ப் பிரிவில் அதாவது மனிதர்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவர்கள் பிரிவில், தேவர்கள் சாத்விகத்தன்மை மிகுந்தவர்கள்.  தேவர்கள் என்றால் ஒளி பொருந்தியவர்கள் என்று பொருளாகும்.  ஒளி சத்துவ குணத்தின் தன்மையாதலால் தேவர்களை ஆராதனம் செய்வதால் மனிதர்களுக்கு சாத்விகத் தன்மை பெருகி சுய திருப்தியும், அமைதியும், ஆனந்தமும் ஓங்கி தன்னைத் தான் உணரும்  நிலையான ஆத்மஞானம் பெறுவதற்கான வழியும் திறந்து விடுகின்றது. 

இது எப்படி நேருகிறது என்று பார்ப்போம்.  சாத்விகத்தன்மை பெருகப் பெருக மனது புலன்கள் வாயிலாக வெளியே சென்று அலைந்து திரிவது படிப் படியாக குறைகிறது.  சாத்விகத் தன்மை திருப்தியையும் ஆனந்தத்தையும் அமைதியையும் கொடுக்கிறபடியால் மனது வெளியே ஓடும் தன்மையை விட்டு உள்நோக்குடையதாக மாறுகிறது.  ஸத்துவ குணம் பெருகிப் பெருகி சுத்த ஸத்துவநிலை கைகூடும்பொழுது ஆண்டவனின் ஸகுண-தரிசனம்  அதாவது ஒளிபொருந்திய உருவ-தரிசனம் கிடைக்கிறது; அத்துடன் ஜீவத்தன்மை நீங்குகிறது.  மனம் புலன்கள் வாயிலாக வெளியே சென்று விஷயானந்தத்தைத் தேடி அலைந்து திரிவது கானலை நீரென்று எண்ணி மான்கள் அதை நோக்கி ஒடுவதுபோலாகும்.  ஓட ஓட தளர்ச்சி உண்டாகும், தாகம் அதிகமாகும் நீரோ கிடைக்க போவதுமில்லை; இது மான்கள் விஷயத்தில்.  அதைப் போலவே மனிதர்கள் விஷயத்தில்; விஷயங்கள் நிலையற்றவைகள் ஆதலால் அவைகள் நம்மை விட்டு எந்நேரமும் போகக்கூடியவைகள்.  அவைகளால் ஆனந்தம் பெறுவோமென்றால்  வாலிபப்பருவத்தில் அனுபவித்த அதே இன்பங்கள் மென்மேலும் அனுபவிக்கும் பொழுது மூப்பெய்திய நிலையில் புலன்களின் தளர்வினாலும் தேய்மானத்தாலும் துன்பங்கள் அளிப்பவைகளாக மாறிவிடுகின்றது.  சர்க்கரை நோய் வந்த பிறகு இனிப்புப் பொருட்களை பார்ப்பதே ஒருவருக்கு துன்பமளிப்பதாகத் தானிருக்கும்.  ஆகையினாலே விஷயங்களை அனுபவிப்பது புலன்களுக்கும் மனதிற்கும் சுகத்தையோ துக்கத்தையோ கொடுக்குமே தவிர ஆன்மாவின் தன்மையான ஆனந்தத்தை ஒரு பொழுதும் கொடுக்காது.  ஆன்மாவின் தன்மையாதலால் ஆனந்தம் என்கிற அனுபவம் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அப்பாலிருக்கிறது.  

உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் எப்பவும் ஆனந்தமாக இருக்கவே விரும்புகிறது.  ஆனந்தம் தங்கள் நிஜரூபமேயாதலால் அது இயல்பாகிறது.  மேலும் எல்லா உயிரினங்களும் பிற உயிரினங்களால் நேசிக்கப்பட விரும்புகிறது.  தானும் பிற உயிரினங்களை நேசிக்கத் தான் முயற்சிக்கிறது.  ஆனால் தன் சுயநலம் குறுக்கே நிற்பதால் பிற உயிரினங்களை நேசிப்பதென்பது எப்பொழுதும் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.  இருந்தாலும் அடிப்படையாக பார்த்தால் ஒவ்வொரு உயிரும் பிற உயிர்களை நேசிக்கத்தான் விரும்புகிறது என்பது தெரியவரும்.  பிறரின் நேசத்தையே எப்பவும் விரும்புவதிலிருந்து தானும் பிறரை நேசிக்கவே விரும்புகிறதென்பது யுக்த்தியைக்கொண்டு நாம் தெரிந்து கொள்ளலாம்.  ஆக, அன்புக்கு கட்டுப்படாதிருக்க எந்த பேய் பிசாசாலும் கூட இயலாது.  சத், சித், ஆனந்தம், அன்பு இவை யாவும் பரமாத்மாவின் தன்மையாதலால் இத்தன்மைகள் சமவியாப்தி உடையவைகளாகிறது.  அதாவது இவைகளில் ஒன்று இருக்குமிடத்தில் மற்றவைகள் இருந்தே ஆகவேண்டும். 

கனவற்ற உறக்கத்தில் உலகமோ அதிலுள்ள கஷ்டங்களோ யாருக்கும் தெரிவதில்லை.  தான் அன்னேரம் ஆனந்தமாக இருந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போல எல்லோருக்கும் தெரியுமென்பது திண்ணம்.  தூக்கத்தை தவிர மற்று இரு நிலைகளாகிய கனவிலும் நனவி லும் பயம், துக்கம் போன்ற ஆனந்தத்தை பாதிக்கும் அனுபவங்களுக்கு நாம் ஆளாகிறோம்.  இதற்க்கு காரணமென்ன?  தூக்கத்தில் நம் மனமானது தன்னுடைய வெளிச்செல்லும் இயல்பை துறந்து உள்நாட்டமுடையதாக மாறி ஆன்மாவுடன் ஒன்றியிருந்தது.  கனவில் மனமானது புலன்கள் வாயிலாக வெளியே செல்லவில்லை என்றாலும் ஆனந்தமே ஸ்வரூபமாகியுள்ள தன் ஆன்மாவிடமிருந்து பிரிந்து விட்டது.  உடனே அதற்க்கு ஆனந்தத்தை பாதிக்ககூடிய துன்பம், பயம், கவலை முதலிய அனுபவங்கள் உண்டாகிறது.  நனவில் புலன்கள் வாயிலாக வெளியே ஓடித்திரிந்து துன்பங்களுக்காளாகிறது.  ஆக துன்பத்தின் சம்பந்தமேதுமில்லாமல் ஆனந்தானுபவம் உண்டாவதற்கு மனம் வெளிநாட்டம் சிறிதுமில்லாமல் ஆன்மாவுடன் ஒன்றியிருப்பதே காரணமாகுமென்பது நமக்கு தெளிவாக தெரிய வருகிறது. தன் ஸ்வரூபமே ஆனந்தமாக இருப்பதினால் எந்த வெளிப்பொருளையும் அண்டி நிற்காமல் தூக்கத்தில் மனதிற்கு ஆனந்தானுபவம் உண்டாகிறது.  இதிலிருந்து முடிவாக நமக்கு தெரியவருவது என்னவென்றால் ஆனந்தானுபவத்திற்க்கு உபாயம்  விஷயசுகங்களை அனுபவிப்பதல்ல, மாறாக விஷயசுகங்களிலிருந்து மனதை விடுவித்துக்கொண்டு உள்ளே திருப்பி ஆன்மாவுடன் ஒன்ருபடச்செய்வது மட்டும் தான் என்பதாகும்.  இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்? 

மனதின் போக்கை நன்கு புரிந்துகொண்டு, அதை நாம், நம் விருப்பத்திர்க்கிணங்க, கட்டுப்படுத்தி நிறுத்தும் உபாயத்தை தெரிந்து கொள்ளவேண்டும்.  மனம் விழிப்பு நிலையில் புலன்கள் வாயிலாக ஏன் வெளியே செல்லத்துடிக்கிறது?  மனதின் இராஜஸ-தாமஸத்தன்மைகளினால் தான் அது வெளியே செல்லத்துடிக்கிறது.  மனதில்  ஆசைகள் மிகுந்திருந்தால் அது இராஜாஸ-தாமஸத்தன்மைகள் உடையதாகிறது.  ஆகையினாலே மனதிற்கு படிப்படியாக சாத்விகத்தன்மையை ஊட்டிவிடவேண்டும்.  உணவில் சாத்விகம், தொழில்த் துறையில் நேர்மையை கடைபிடிப்பதினால் சாத்விகம், உடை மற்றும் பழக்க வழக்கங்களில் எளிமையை கையாளுவதால் சாத்விகம், நண்பர் விஷயத்திலும் சாத்விகம் - இப்படி எல்லாச்செயல்களிலும் சத்துவகுணத்தைச்சார்ந்து நிற்க மனதை பழக்கப்படுத்த வேண்டும்.  சாத்விகப் பழக்கங்களுடன் ஜபம், பூஜை, நாமசங்கீர்த்தனம், தத்துவ ஆராய்ச்சி போன்ற பழக்கங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.  இப்படி பழக்கப்படுத்துவதால் விழிப்பு நிலையில், புலன்கள் வாயிலாக வெளியே ஓடித்திரியும் மனம் சிதறி ஓடாமல் ஒருமுகப்பட்டு நிற்க ஆரம்பிக்கும்.  ஒருமுகப்பட்ட மனம் பொருட்களிலிருந்தும் புலன்களி லிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு உள்ளே திரும்ப ஆரம்பிக்கும்.  இதற்க்கு யோகமார்க்கத்தில் பிறத்தியாஹாராம் என்று பெயர்.  பிரத்தியாஹாரத்திற்கு மேல் தாரணை, தியானம், சமாதி என்று மூன்று நிலைகள் உள்ளன.  மனம் மேலும் மேலும் தூய்மையடை வதர்கேற்ப இம்மூன்று நிலைகளும் கைகூடுகின்றது.  சமாதியில் ஜீவத்தன்மை அறவே ஒடுங்கி விடுகிறது.  சமாதியிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்தாலும் மனதின் ஜீவத்தன்மை ஒடுங்கிவிட்ட படியால் சிவத்தன்மை மட்டும் எஞ்சி அதுவே நிலைத்து நிற்கிறது.  துயரங்களிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு இதுவே உபாயமாகும்.  இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்ற ஐயம் எழக்கூடும்.  அதற்கு நடைமுறையை அனுசரித்துள்ள பாங்கிலேயே நாம் இப்பொழுது ஆராய்ச்சி செய்வோம்.

உலகத்தில் நடந்தேறுகிற எல்லாநிகழ்சிகளும் காரிய-காரணத் தொடர்புடையவையாகும்.  விஞ்ஞானம் கூறுவதென்ன?  "Every action has got an equal and opposite reaction."  அதா வது ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான எதிர்விளைவுகள் உள்ளது என்று இதற்குப் பொருள்.  நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பமும் துன்பமுமாகிய எல்லா நிகழ்ச்சிகளும் நம்முடைய பூர்வ கர்மங்களின் விளைவேயாகும்.  புண்ணியத்தின் விளைவு இன்பம்; பாவத்தின் விளைவு துன்பம்.  முத்தி நிலையை அடையும் வரையில் சூக்ஷ்ம சரீரத்தை விட்டுப் பிரியாத ஜீவாத்மாவானது புதிது புதிதாக தூலசரீரங்க்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக எடுத்துக்கொண்டே இருக்கும்.  இப்படித் தூலசரீரங்களை எடுத்துக்கொண்டே போனாலும் சூக்ஷ்ம சரீரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நிலை பெற்றவண்ணமே இருந்து வருகிறது.  

நாம் இப்போதுள்ள விமானங்களில் கறுப்புப் பெட்டி (Black Box) என்று ஒரு கருவியிருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.  இக்கறுப்புப் பெட்டியானது விமான ஓட்டியின் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.  இது அங்கு நடைபெறும் அனைத்து சம்பாஷணைகளையும் இதர ஓசைகள் என்னென்னவுண்டோ அவைகளையும் விமான ஒட்டி சிறிதும் உணராத நிலையில் ஒலிப்பதிவு செய்து விடுகிறது.  விமானம் விபத்திற்கு உள்ளாகும் சந்தர்பங்களில் கறுப்புப் பெட்டியை தனியாக கழற்றி அதில் பதிவாயிருக்கின்ர ஓசைகளை (de-code) புரியும்படியாக செய்து விடுகிறார்கள்.  விமானம் என்னென்ன ஆபத்திற்கு உள்ளானாலும் கருப்புப் பெட்டிக்கு எச்சேதமும் ஏற்படாது.  

இக்கருப்புப் பெட்டியைப் போலவே ஒவ்வொரு ஜீவனின் சூக்ஷ்ம சரீரத்துடன் ஒரு கருவி இணைக்கப் பெற்றுள்ளது.  தூலசரீரம் மடிந்தாலும் சூக்ஷ்மசரீரத்திற்கும் அத்துடன் இணைக்கப் பெற்றிருக்கும் இக்கருவிக்கும், ஜீவாத்மா முத்தி நிலை அடையும் வரையில், எவ்விதச் சேதமோ பாதிப்போ ஏற்படாது.  ஒவ்வொரு ஜீவனும் செய்கின்ற புண்ணிய-பாவமயமான அனைத்துச் செயல்களும் இக்கருவியில், ஒவ்வொரு ஜீவனும் சிறிதும் உணராத நிலையில், இயல்பாகவே பதிவாகி விடுகிறது.  ஈஸ்வரன் இக்கருவியில் பதிவாயிருக்கும் புண்ணிய-பாவங்களை சீர்தூக்கிப் பார்த்து அதற்க்குத தகுந்தபடி ஒவ்வொரு ஜீவனுக்கும் இன்ப-துன்ப அனுபவங்களை கொடுத்துக் கொண்டு வருகிறான்.  இது சாஸ்திரங்களின் பொதுக்கருத்தாகும். 

சைவசித்தாந்தக் கருத்துப்படி ஈஸ்வரன் ஒவ்வொரு ஜீவனுக்கும் அந்தந்த ஜீவனின் முன் கர்மங்களுக்குத் தக்கபடி பலனளிப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஜீவனும் படிப்படியாக கூடுதல் மனத்தூய்மையடைந்து முத்தி நிலை எய்துவதற்கு ஒவ்வொரு ஜீவனையும் ஊக்குவித்து உதவி புரிகிறான் என்பதாகும். இது ஈஸ்வரனின் எல்லையில்லாத அன்பிற்கும் காருன்னியத்திற்கும் பொருத்தமான செயலாகிறது.  ஈஸ்வரன் ஆனந்தம், அன்பு, காருண் ணியம் ஆகிய தன்மைகளை தன் உருவமாக கொண்டவனென்று வேதங்களும் புராண நூல்களும் ஞானிகளும் எடுத்துரைக்கின்றனர்.  

திருமூலரின் திருமந்திரம் "அன்பே சிவம்" என்கிறதல்லவா.  இறைவன் ஜீவர்களனை வரையும் தன்-மயமாக்கிக் கொள்ள துடிக்கிறான்.  எப்படி வாயு மண்டலமானது எங்காவது (vacuum) வாயுசூன்னியமான இடம் உருவானால் அங்கே நுழைய துடிக்கிறதோ அதைப் போலவே இறைவனும் ஜீவர்களுடைய சுயநலத்தினால் உருவான பாதுகாப்புவேலியை உடைத்துக்கொண்டு அவர்களுடைய இதயகமலங்களில் புகுந்து தன்னோடு நிரந்தரமாக ஒன்ரு-படுத்திக்கொள்ள துடிக்கிறான்.  லலிதா ஸஹஸ்ரநாமங்களுள் "ஸாமரஸ்ய-பராயணா" எனும் நாமமானது இக்கருத்தை முழுமையாக கொண்டிருக்கிறது.  தன் குழந்தைகளாகிய ஜீவர்களை "பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து" நிற்கின்ற இறைவனால் எப்படி துன்புறுத்தவோ கொடுமைகளுக்குட்படுத்தவோ இயலும்?  சரி; அப்படியானால் உலகிலுள்ள ஜீவஜாலங்களனைத்தும் தினசரி எவ்வளவோ துன்பங் களுக்குள்ளாவதை எப்படி விளக்குவது? 

இதற்க்கு விடையளிக்கும் பாங்கில் நாம் உலக நடைமுறையை கவனிப்போம்.  தாயார் தன் குழந்தைகள் தவறுசெய்யும் பொழுது அவர்களை திருத்தும் பாங்கில் பல்வேறு தண்டனை யளிக்கிறாள்.  தண்டனையளிப்பதைக்கொண்டு தாயாருக்கு குழந்தைகளிடத்தில் துவேஷம் கற்பித்துவிட முடியுமா?  குழந்தை தன் குணத்தை மாற்றி க்கொண்டுவிட்டால் தாயார் தண்டனையளிப்பதை அந்நேரமே நிறுத்திவிட்டு, அதை அணைத்து முத்தம் கொடுப்பதில் லையா?  இதைப்போலவே இறைவனும் ஜீவர்கள் தம் தம் தவறுகளை உணர்ந்து பச்சாத் தாபப்பட்டு, தங்களை இனித் தவறுகளொன்ரும் செய்யாவண்ணம் திருத்திக்கொள்ளும் பொருட்டு, துயரங்களனுபவிக்கச் செய்து  அதன் வாயிலாக அவரவர் உள்ளங்களை தூய் மைப் படுத்துகிறான்.  இறைவனின் இச்செயலுக்கு நாம் தண்டனை என்று பொருள் கொள்ளாமல் தூய்மைப்படுத்துதல் என்று மட்டும் பொருள் கொள்ள வேண்டும்.  இங்கும் இறைவனுக்கு பகுபாடுள்ளதென்று நாம் கொள்ளக்கூடாது.  

ஓர் உதாஹரணத்தை எடுத்துக் கொள்வோம்.  யானை, எருமை, ஆடு - இம்மூன்று விலங்கி னங்களை அடக்கி நிறுத்துவதற்கு நாம் ஒரேமாதிரியான கோலையா பயன் படுத்துவோம்? இல்லை.  மூன்றினத்திற்கும் மூன்றுவிதமான கோலைத்தான் பயன் படுத்துவோம்.  யானையை அடக்க பயன்படுத்தும் கோலால் ஆடினத்தை அடித்தோமானால் அது செத்தே போய்விடும்; எருமையினத்தை  அடித்தோமானால் அதன் எலும்பு நொறுங்கும்.  ஆடு, எருமையினங்களுக்கு பயன்படுத்தும் கோலால் யானையை அடிப்போமாகில் யானைக்கு தன் உடம்பில் பெரிதாக வலியொன்றும் தெரியாது.  ஆக, அடக்கப் பயன்படுத்தும் கோலி லும் முறையிலும் பாகுபாடொன்றும் பாராமல் அதது அந்தந்த சந்தர்பத்திற்கு பொருத்தமாக இருப்பதையே நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.  ஆண்டவன் விஷயத்திலும் இப்படித்தான் கொள்ளவேண்டும்.  

கறை, அழுக்கு இவற்றை நீக்க நாம் துணிகளையும் பாத்திரங்களையும் இரஸாயனப் பொருட்களின் உதவியுடன் அடித்துத் துவைக்கிறோம்; மண்ணையும் சாம்பலையும் வைத்து தெய்க்கிறோம்.  நம்முடைய இச்செயலானது அப்பொருட்கள் கெட்டுவிடவேண்டுமென்கிற எண்ணத்தினாலா நாம் செய்கிறோம்?  அவை மாசு நீங்கி பளிச்சென்றிருக்கத்தானே நாம் இப்படிச் செய்கிறோம்.  வெண் பட்டிற்கு ஒப்பாக இருக்கிறது மனம்.  அதில் பாபங்க ளுடைய உருவத்தில் பல தினுசுக் கறைகள் படிந்திருக்கின்றன.  அவைகளை நீக்குவதற்கு ஆண்டவன், மனதினை துயரக் கனலின்மேல் வைத்துப் புழுங்கி கண்ணீர்-ஜலத்தில் முக்கி அடித்துத் துவைக்கிறான். மனம் தூய்மையடைவதற்கு துயர அனுபவத்தைத் தவிர வேறு உபாயமேதுமில்லை.  இருந்தால் கருணாமயனாகிய இறைவன் ஏன் துயர அனுபவத்தை கொடுக்கிறான் அல்லது கொடுக்கவேண்டும்?  விவேகம் படைத்த மனித இனம் இக்கருத்தை நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.  

இனி நாம், துயரம் வரும்பொழுது இயல்பாக என்ன செய்கிறோம் என்று பார்ப்போம்.   துயரம் வரும்பொழுது தன்னுடைய ஊழ்வினையால் அதாவது தவறுகளினால் தான் துயரம் வந்ததென்று ஒரு பொழுதும் நாம் உணர்வதில்லை.  மாறாக அந்நேரம் பிறரைப் பழிப்பதி லேயே நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம்.  "அவனால் தான் நான் கேட்டேன்; இவனால் தான் நான் கேட்டேன்" என்றெல்லாம் கூறிக்கொண்டே இருந்து விடுகிறோம்.  பிறரைப் பழிப்பதற்கு சில நேரங்களில் வாய்ப்புக் கிடைப்பதில்லை.  ஏனென்றால் தன் தவறுகளினாலே தான் துயரம் வந்தது என்ற உண்மை நிதர்சனமாக எதிரில் தெரிகிறது.  அந்நேரம் நாம் என்னசெய்கிறோம்?  "ஆண்டவனுக்கு கருணையே இல்லை போல் தெரிகிறது.  இத்துயரை அனுபவிப்பதற்கு நான் எவ்விதத்திலும் பொருத்தமற்றவன்."  என்று தமக்குத் தாமே சான்றிதழ் கொடுத்துக்கொள்ள முனைகிறோம்.  பச்சாத்தாபப்பட்டு வருந்துவதற்கு மாறாக, துன்பங்களிலிருந்து விடுபட மட்டும் துடிக்கிறோம்.  ஆனால் அப்பொழுதும் மனதை ஆண்டவன் பக்கம் திருப்புவதேயில்லை.  மாறாக உலகமக்களிட-மிருந்தும் பொருட்களிடமிருந்தும் ஆறுதல் பெற நினைக்கிறோம்.  எவ்வளவு துயரம் வந்தாலும் நமக்கு "தரிக்கிலேன் காயவாழ்க்கை சங்கரா போற்றி" என்ற எண்ணம் வருவதேயில்லை.  

திருவாதவூரடிகள் திருவாசகத்தில் எடுத்துரைப்பதை பார்ப்போம்.  "திருச்சதகம்" ஏழாம் பகுதி "காருன்னியத்திரங்கல்"; அதில் ஆறாவது செய்யுளைப் பார்ப்போம். 

இழித்தனன்    என்னை    யானே    எம்பிரான்    போற்றி   போற்றி
பழித்திலேனுன்னை      என்னையாளுடைப்      பாதம்       போற்றி
பிழைத்தவை  பொறுக்கையெல்லாம்  பெரியவர்  கடமை  போற்றி
ஒழித்திடிவ்வாழ்வு       போற்றி        உம்பர்நாட்   -   டெம்பிரானே.

இதன் பொருளைப் பார்ப்போம்.  "நானிருக்கும் இவ்விழிந்த நிலைக்கு என்னையாளாக்கிக் கொண்டது  நானொருவனேயன்றி வேறொருவரும் அல்லர்.  என் முந்தைய கர்மவினை தான் இத்துயர நிலைக்குக் காரணம்.  கர்மங்களுக்குத் தகுந்த பலனைக் கொடுக்கின்ற ஈஸ்வரனாகிய நீயோ, நான் அனுபவிக்கும் துயரத்தை எனக்கு ஒருவிதத்திலும் வரவழைத்தவனல்லன்."  சரி. அப்படியானால் இத்துயரிலிருந்து எனக்கு விமோசனமே கிடையாதா என்றால் அதற்க்கு பதில் வருகிறது.  "பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி".  "நான் பிழை செய்ததினால் தான் இந்நிலைக்கு ஆளானேன் என்றாலும் இப்பொழுது என் பிழையை உணர்ந்து பச்சாத்தாபப் படுகிறேன்.  இதற்க்குமேல் இப்பிழையை நான் செய்யவே மாட்டேன்.  நிகழ்ந்துவிட்ட பிழையை நீ மன்னித்தருள்-வாயாக."  என்னுடைய இவ்வாழ்க்கைக்கு (உன்னைப் பிரிந்து தனி ஜீவனாக வாழுமிவ்-வாழ்க்கைக்கு) நீ ஒரு முற்றுப் புள்ளி வைப்பாயாக.  ஜீவாத்மாவாக இருப்பதினாலன்றோ புலன்கள் இழுத்துச்செளும் வழியே சென்று நான் தவறிழைக்க நேருகிறது."  நாம் அனைவரும் மேலேகூறியுள்ள கருத்திற்கிணங்க நம்மை அமைத்துக் கொள்வது மட்டும் தான் துயரங்களிலிருந்து மீளுவதற்கு உபாயமாகும்.  நாம் திருந்திவிட்டால் துயரத்தைக் கொடுத்து ஆண்டவன் நம்மை ஏன் தண்டிக்கப் போகிறான்? 

இங்கே சாஸ்திரங்களில் கூறியுள்ள நியாயத்தை, அதாவது யுக்தியைப் பார்ப்போம்.  "யதா லோகே ததா வேதே"  என்பது சாஸ்திரங்களின் கொள்கையாகும்.  உலக நடைமுறைக்கு பொருத்தமான யுக்தியானது வேதவிஷயத்திலும் பொருந்தும்.  வேதமே இறைவனின் ஸ்வரூபமாதலால் வேதவிஷயத்தில் பொருத்தமாகிற யுக்தியானது  இறைவன் விஷயத்திலும் பொருத்தமாகத்தானே இருக்க முடியும்.  

நம் சித்தம் கல்லைப் போல் கடினமாக இருக்கிறது.  அது கனியைப் போல் மிருதுவானால் மட்டும் தான் அதற்க்கு தெய்விகத்தன்மை வாய்க்கிறது.  இறைவனின் குணங்களாகிய அன்பு, கருணை போன்ற பண்புகள் கனியைப் போல் மிருதுவான சித்தத்தில் மட்டும் தான் காணப்படுகிறது.  ஜீவாத்மாவின் சுயநலமானது மனதை பாறையைக் காட்டிலும் கடினமாக்கியுள்ளது. துயரத்தீயில் வேக வேக இக்கன்னெஞ்சிற்கு கனித்தன்மை வந்து விடுகிறது.  அதற்காக இறைவன் ஜீவர்களை துயரத்திற்கு ஆளாக்குகிறான்.  மனது கனிப் பக்குவம் அடைந்த உடன் இறைவன் மனதை துயரத்தீயிலிட்டு வேகவைப்பதை நிறுத்திவிடுகிறான்.  ஆயுள் தண்டனைக் கைதிகள் நல்ல சுபாவத்தை அடைந்துவிட்ட காரணத்தால் பதினான்கு வருடங்கள் சிறையிலிருப்பதற்கு பதிலாக பத்தோ பதினொன்றோ வருடங்கள் மட்டும் பூர்த்தியான நிலையிலே சிறையிலிருந்து வெளிவருவதை நாம் பார்க்கிறோமல்லவா.  மனித இனமே இவ்வளவு கருணை காட்டும் பொழுது கருணைக்கடலகிய இறைவன் மட்டும் வீணாக ஜீவர்களை தண்டிப்பானா? மாட்டான் என்பது திண்ணம்.  

ஆண்டவன் ஜீவர்களுக்கு இரண்டு விதத்தில் கருணை புரிகிறான்.  சுகத்தையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுத்து அருள் புரிவதற்கு அறக்கருணை என்பார்கள்.  சிவபெரு மானுக்கு, சுகத்தை கொடுத்து அருளும்பொழுது "ம்ருடன்" என்று காரணப்பெயர் அமை கிறது.  துயரத்தீயில் உள்ளத்தை வேகவைப்பதற்கு மறக்கருணை என்பார்கள்.  அப்பொழுது சிவனுக்கு காரணப்பெயர்களாக ஹரன், உக்ரன், பீமன் என்றெல்லாம் நாமங்கள் அமைகின்றன. ஜீவாத்மா பூரணத்துவம் எய்துவதற்கு இறைவனின் இவ்விரண்டு வகையான கருணையும் அவசியமாகிறது.  இக்கருத்தை மாணிக்கவாசகர் எப்படிக் கூறுகிறார் என்று பார்ப்போம்.  அகவல் திருக்கோத்தும்பி, செய்யுள் பதினொன்று.  

வன்நெஞ்சக்கள்வன்             மனவலியனென்னாதே
கன்னெஞ்சுருக்கிக்  கருணையினாலாண்டுகொண்ட
அன்னந்திளைக்    -   குமணிதில்லை   -   யம்பலவன்
பொன்னங்கழலுக்கே     சென்ரூதாய்     கோத்தும்பீ. 

இதன் பொருள் - "நான் மனமுருகாத கன்னெஞ்சக்காரனாயிருந்ததையும் பொருட்படுத்தாது, என் கன்னெஞ்சுருகும்படி, இறைவன் வலிய வந்து என்னை தன் கருணையினால் ஆட்கொண்டான். அவனுடைய பொன்னம்பலத்தை அன்னப்பறவைகள் எப்பொழுதும் சூழ்ந்திருக்கும்.  அவனுடைய, பொற்கமலங்களுக்கொப்பான திருத்தாள்களுக்கருகே  சென்று நீ ரீங்காரம் செய்வாயாக, என் ஜீவனாகிய இராஜவண்டே.." 

[நரியைப் பரியாக்கும் படலத்தில் திருவாதவூரர் பாண்டிய மன்னனின் அவமரியாதைக்கும் பல்வேறு தண்டனைகளுக்கும் இலக்கானார்.  இந்நிகழ்ச்சிகளால் வாதவூரரிடமிருந்த மும்மலங்களும் அவைகளினாலான பற்றுதல்களும் (உலகப்பற்று, உடல்ப்ப்று, உயிர்ப் பற்று, புகழ்ப்ப்று) அறவே நீங்கி விட்டது.  இப்பாடலில் இந்நிகழ்ச்சிகள் ஞாபகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ]

இறைவன் நம்மை எவ்வித அனுபவத்திற்கு ஆளாக்கினாலும் அது உண்மையில் நம்முடைய நன்மைக்கே ஆகுமென்ற திடமான நம்பிக்கை வந்துவிட்டால் பிறகு எத்துயரமும் துயரமாகத் தோன்றாது.  துயரங்கள் வரும்பொழுது "இத்துயரை அனுபவிப்பதற்கு நான் எல்லா விதத்திலும் பொருத்தமானவன் தான்.  இது என்னுடைய ஊழ்வினையால் வந்தது தான்." என்று ஒருவன் உணர்வானேயானால் அந்த நிமிடத்திலிருந்து இறைவனின் கருணைக்கு அந்த ஜீவன் பாத்திரமாகிறான்.  தவறை உணர்ந்து பச்சாத்தாபப்படுபவனை ஆண்டவன் மேலும் தண்டிக்கிறதில்லை. பகவத் கீதையில் ஒன்பதாவது அத்தியாயத்தில் பகவான் கூறுவது இக்கருத்தையே தான்.  

अपि     चेत्     सुदुराचारो       भजते     मामनन्यभाक्  |
साधुरेव       मन्तव्यः     सम्यग्व्यवहितो    हि    सः  ||
क्षिप्रं    भवति    धर्मात्मा         शश्वच्छान्तिन्निगच्छति  |

"ஒருவன் எவ்வளவு பாவம் பண்ணினவனாக இருந்தாலும் பச்சாத்தாபப்பட்டு என்னையே போற்றிப் பணிந்து நிர்பானாக்கில் அவனை நல்லவனென்றே கருத்தில் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் இப்பொழுது அவன் புத்தி திருந்தி விட்டவனாகிறான்.  அவன் வெகு விரைவில் தர்மாத்மா என்றழைக்கப்படுவான்.  அவன் உறுதியான மனச்சாந்தியையும் அடைவான்." 

பாவத்தின் விளைவு துன்பம், புண்யத்தின் விளைவு இன்பம்; என்று மேலே கூறினோ-மல்லவா.  ஒருவர் துன்பங்களுக்கு நடுவில் தற்சமயம் இருக்கிறார்.  அவர் தற்ப்பொழுதுள்ள தம் விதியை எப்படி மாற்றியமைத்துக் கொள்ள இயலும்?  ஓர் உதாஹரணம் வாயிலாக இக்கேள்விக்கு சுலபமாக விடையளித்து விடலாம்.  

ஒருவருக்கு ஒரு தென்னந்தோப்பு இருக்கிறது.  பல வருடங்களாக சொந்தக்காரர் தோப்பை பராமரிக்காமல் இருந்துவிட்டார்.  உரம் வைத்து தண்ணீர் பாய்ச்சாததால் இப்பொழுது மரங்கள் காயேதுமில்லாமல் மூளியாக நிற்கிறது.  இன் நிலையில் அவர் தன் தோப்பின் தோற்றத்தை மாற்றியமைத்து, தென்னைகளை காய்கள் தொங்கும் நிலையில் பார்க்க விரும்பினால் அவர் என்ன செய்ய வேண்டும்?  அன் நிமிடமே உரம் வைத்தல், நீர் பாய்ச்சுதல் போன்ற களப் பணிகளை துவக்க வேண்டும்.  சரி.  களப்பணிகளையும் ஆரம்பித்து விட்டார்.  ஆனால் தென்னைகளின் உச்சியில் நாளைக்கே தேங்காய்கள் உண்டாகிவிடுமா?  பராமரிப்பு வேலைகள் துவக்கப்பட்டு விட்டாலும் விளைய்ந்து முற்றின  தேங்காய்களை பறிப்பதற்கு குறைந்த பக்ஷம் மூன்றாடுகள் காத்திருக்க வேண்டும்.  இம்மூன்றாண்டு காலத்திற்கு முன்னதாக தோப்பின் உரிமையாளர் பலன் பெற என்னென்ன முயற்சிகள் செய்தாலும் அம்முயற்சிகளினால் பலனேதும் கிட்டாதென்பது திண்ணம்.  இதற்கு என்ன காரணம்?  ஒவ்வொரு செயலும் முடிந்த பிறகு பலன் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்டகாலம் வரை காத்திருக்க வேண்டுமென்பதாகும் அது.    இக்காலயளவிற்கு பரிணாமகாலம் என்பார்கள்.  ஆக, பரிணாமகாலம் வரை காத்திருந்து தான் எவராலும் தன் விதியை மாற்றியமைத்துக்கொள்ள இயலும்.  

இதைப்போல், நம்முடைய இப்பொழுதுள்ள விதியை நாம் மாற்றியமைத்துக் கொள்ள நினைத்தால் அதற்கு தகுந்த முயற்சி செய்வதோடு பரிணாமகாலம் வரை காத்திருக்கவும் வேண்டும்.  முயற்சி ஒரு நாளும் வீண் போகாதென்பது இயற்கையின் உறுதியான சட்ட மாகும்.  காலம் வரும் வரை காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஒருவர் "மதியால் ஆவ தொன்றுமில்லை.  விதியை எவ்விதத்திலும் வெல்ல முடியாது" என்று கூறுவாராகில் அது அவருடைய அறிவின்மைக்குத்தான் சான்றாகுமே தவிர, அது ஒருநாளும் உண்மை-யாகிவிடாது.

பாவங்களின் விளைவாகிய துயரங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு நம் விதியை மாற்றியமைப்பதற்கு புண்ணியம் தொடர்ந்து செய்வதே உபாயமாகும்.  அப்படிச் செய்தாலும் பழைய பாவங்களின் விளைவாக, இப்பொழுது நதீ-பிரவாஹம் போல் வந்து கொண்டிருக்கும் துயரங்களின் வேகம் தணிந்து, இப்பொழுது செய்துகொண்டிருக்கும் புண்ணிய கர்மங்களின் பலன் கைக்கெட்டுவது வரை காத்திருந்தே ஆகவேண்டும்.  "தான் பாதி தெய்வம் பாதி" என்ற சொல்லுக்கிணங்க தன் கடமையைச் செய்து முடித்த பின் பலன் தரக்கூடிய இறைவனின் அருளை நாடி, வணங்கி நின்றே ஆகவேண்டும்.  தன் கடமையை ஒழுங்காகச் செய்து முடித்து விட்டால் பலன் வந்து தானே தீரவேண்டும் என்று இறுமாப் புக்கு இடம் கொடுக்காமல் இறைவனருளை நாடி நின்றே ஆகவேண்டும்.  இறைவன் ஸர்வ வல்லமை படைத்தவனாதலால் (கர்த்தும்) பலன் தரவோ (அகர்த்தும்) பலன் தராமலிருக் கவோ (அன்யதா வா கர்த்தும்) பலன் தருவதை ஒத்திப் போடவோ செய்ய திறமை படைத் தவன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

இவ்வாறு நம் முயற்ச்சியாலும் இறைவனருளாலும், இரண்டும் சேர்ந்த நிலையில் மட்டும் தான் விதியை மாற்றி அமைத்துக் கொள்ள முடிகிறது. 

அன்பே சிவம்
 
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

No comments:

Post a Comment